மகா கந்தசஷ்டி விரதம் ; 48 நாள் விரதம் இன்று தொடக்கம்
முருக பக்தர்களால் ஆண்டுதோறும் பக்தியுடன் கடைப்பிடிக்கப்படும் மகா கந்தசஷ்டி விரதம், இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ததை நினைவுகூரும் வகையில் நடைபெறும் கந்தசஷ்டி விழா, முருக பக்தர்களுக்கு முக்கியமான ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது.

கந்தசஷ்டி விரதத்தை கடைப்பிடித்து முருகப்பெருமானை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
குறிப்பாக குழந்தை பாக்கியம், திருமணம், குடும்ப நலம், உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்காக பக்தர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

மகா கந்தசஷ்டி விரதத்தின் சிறப்பு முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து தேவர்களை காத்தது ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி நாளில் என புராணங்கள் கூறுகின்றன.
இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசைக்கு பின்னர் வரும் ஆறாவது நாளில் மகா கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.
மற்ற மாதங்களில் சஷ்டி விரதம் பொதுவாக ஒரு நாள் கடைப்பிடிக்கப்படும் நிலையில், மகா கந்தசஷ்டி காலத்தில் பக்தர்கள் ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
சூரசம்ஹாரம் நிறைவடைந்த பின்னர் மறுநாள் நடைபெறும் முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணத்தை தொடர்ந்து பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்வது வழக்கமாக உள்ளது.

யார் விரதம் இருக்கலாம்? குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மட்டுமின்றி, செல்வ வளம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நலன்களை வேண்டியும் பக்தர்கள் கந்தசஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். பொதுவாக மகா கந்தசஷ்டி விரதம் ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
எனினும், சில பக்தர்கள் தங்களது வழக்கத்திற்கு ஏற்ப 48 நாட்கள், 21 நாட்கள் அல்லது 11 நாட்கள் விரதத்தையும் கடைப்பிடிக்கின்றனர்.
2026ஆம் ஆண்டுக்கான முக்கிய நாட்கள்
48 நாள் விரதம் தொடக்கம்: செப்டம்பர் 29, செவ்வாய்க்கிழமை
21 நாள் விரதம் தொடக்கம்: அக்டோபர் 26, திங்கட்கிழமை
11 நாள் விரதம் தொடக்கம்: நவம்பர் 5, வியாழக்கிழமை
6 நாள் விரதம் தொடக்கம்: நவம்பர் 10, செவ்வாய்க்கிழமை
மகா கந்தசஷ்டி விழா தொடக்கம்: நவம்பர் 10, செவ்வாய்க்கிழமை
சூரசம்ஹாரம்: நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை
முருகன் – தெய்வானை திருக்கல்யாணம்: நவம்பர் 16, திங்கட்கிழமை
ஒருநாள் விரதம்: நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை
