மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்... 24 பேரை பிணையில் விடுவிக்க உத்தரவு!
மெகசின் சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றன.
குறித்த சம்பவத்தின் போது 5.2 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த 24 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், சம்பவத்தில் படுகாயமடைந்த நிஹால் குணவர்தனவுக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மெகசின் சிறைச்சாலைக்கு ஏற்பட்ட 5.2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேதங்களுக்கு ஒவ்வொரு பிரதிவாதியும் தலா ஒரு 122,000 ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கான நட்டஈட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகள் நாளை மறுதினம் (06-11-2024) நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் அவ்வாறு முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.