மதரஸா மாணவன் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நேற்று (02) தீர்ப்பளித்துள்ளார்.
கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் 38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
கிண்ணியா கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி சென்ற சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மதரஸாவுக்குசென்ற மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும், 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.