கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பா?; முன்னாள் அமைச்சர்களிடம் தீவிர விசாரணை
திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான "கெஹெல்பத்ர பத்மே" என்பவருடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று விசாரணைகளை நடத்தியுள்ளது.
ஆயுதக் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் 'கெஹெல்பத்ர பத்மே', சர்வதேச காவல்துறையின் உதவியுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவருடன் அரசியல்வாதிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனக்கு திட்டமிட்ட குற்றக்குழுக்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை எனத் தனது வாக்குமூலத்தில் மறுத்துள்ளார்.
எனினும், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு எவ்விதக் கருத்தையும் தெரிவிக்காமல் வெளியேறினார்.
இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது அழைப்பாணை விடுத்துள்ளது.