உலகில் 7 கண்டங்களிலும் ஒரே நேரத்தில், ஒரே உணர்வுடன் கடைப்பிடிக்கப்படும் மாவீரர்நாள்!
இலங்கை மட்டுமல்லாது உலகில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுந்து வரும் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு உறவுகளால் உணவெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
அமெரிக்க இராணுவத்தில் இருந்து கொல்லப்பட்ட வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு எந்த நாட்டில் நடக்கும்..? கண்டிப்பாக அமெரிக்காவில்தான்..!
பிரித்தானிய இராணுவம்..? - இங்கிலாந்தில்தான்..! பிரெஞ்சு இராணுவம்..? - பரிசில் - அதே Champs Élysée இல்..!
ஆனால், உலகம் முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெங்கும், நினைவுகூரப்படும் ஒரே நிகழ்வு எமது மாவீரர்களைப் போற்றும் - மாவீரர்நாள் மட்டுமே..!
அவுஸ்திரேலியாவில், பிரித்தானியாவில், பிரான்ஸில், ஜெர்மனியில், சுவிஸில், நோர்வேயில், டென்மார்க்கில்… என்று 7 கண்டங்களிலும் ஒரே நேரத்தில், ஒரே உணர்வுடன் கடைப்பிடிக்கப்படும் ஒரே நிகழ்வு மாவீரர்நாள் மட்டுமே..!
தமிழனின் பழக்கம் என்னவென்றால் - ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரை மறக்கமாட்டான். ‘இறைபதம் அடைந்துவிட்டார்’ ‘கடவுளோடு போய்ச் சேர்ந்துவிட்டார்’ ‘கடவுளாகிவிட்டார்’ என்று இறந்தவர்களுக்கு உன்னத நிலைகொடுத்துப் போற்றுவான்.
தன் சிறிய வயதில் தந்தையை இழந்த ஒரு பிள்ளையிடம் “உன் அப்பா எங்கே?” என்று கேட்டுப்பாருங்கள்.
“அப்புச்சாமியிடம் போயிட்டார்” என்று சொல்லும்..! - அது குழந்தையின் அம்மா சொல்லிக்கொடுத்தது.
இது தமிழனின் வழக்கம்.! மரபு,மாண்பு, பண்பு.
“யாதும் ஊரே” என எல்லோரையும் அரவணைப்பான். உலகில் எங்கோ ஒரு மூலையில் யாரோ செத்ததுக்கு தானும் சேர்ந்து அழுபவன் தான் இந்தத் தமிழன்.
அப்படியானவன் - தனக்காக போராடியவர்களை, தனக்காக உயிர் கொடுத்தவர்களை, தமிழனின் அடையாளம் நிலைபெற உழைத்தவர்களை என்ன செய்வான்..?
அதைத்தான் இன்று, இந்தப் புனித நாளில் செய்துகொண்டு இருக்கிறான். தமிழன் நன்றி மறப்பதில்லை. தமிழன் யாருக்கும் எப்போதும் அஞ்சியதும் இல்லை. கொண்ட கொள்கையைக் கைவிட்டதும் இல்லை. மாவீரர்நாள் என்பது தமிழனின் மிகப்பெரும் அடையாளம். இது தமிழனின் நாள்.
பொதுவாக ஒரு நாளில் 24 மணி நேரங்களும் 1440 நிமிடங்களும் இருக்கும். ஆனால் இந்த நாள் அப்படியல்ல. இங்கு மணித்தியாலத்துக்கும் நிமிடத்துக்கும் வேலையே இல்லை.
இது உணர்வுகள் கொண்டு உருவாக்கப்பட்ட நாள். உயிரைக்கொடுத்து உருப்பெற்ற நாள்.
365 நாட்களிலும் தலைசிறந்த நாள் இந்தநாளே..! ஏனென்றால் இது “மாவீரர்நாள்” ஆகும். என இந்த சிறப்பான பதிவை முகநூலில் லண்டனில் வாழும் ராஜீவன் ராமலிங்கம் என்ற இலங்கை தமிழர் பதிவிட்டுள்ளார்.