வடக்கு மாகாணத்தின் மையத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா பதிவிட்டுள்ளதாவது,

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளது.
இது இன்று முற்பகல் 11.40 மணியளவில் முல்லைத்தீவுக்கும் சுண்டிக்குளத்திற்கும் இடையில் சாளை ஊடாக நிலப்பகுதிக்குள் நுழைந்து தற்போது இரணைமடுக் குளப்பகுதியை மையம் கொண்டுள்ளது.
இந்த சாளைப் பகுதி புவியியல் ரீதியாகவும் காலநிலையியல் ரீதியாகவும் கூர்ந்து அவதானிக்க வேண்டிய பகுதி. அண்மித்த காலங்களில் குறிப்பாக கடந்த 2000ம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் உருவாகிய பல காற்றுச் சுழற்சிகள்( தாழமுக்கம்,/ காற்றழுத்த தாழ்வு நிலை/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்/ புயல்) இந்த பகுதியினூடகவே வட மாகாணத்தினுள் பிரவேசித்துள்ளன.
இது இன்று மாலை அல்லது இரவு வலைப்பாட்டுக்கும் அந்தோனியார்புரத்துக்கும் இடையில் மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மிதமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது.
மிதமான மழை கிடைத்தாலும் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகின்றது. இது ஒரு சில தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்க காரணமாக அமையக்கூடும். வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும். அதே வேளை இந்தக் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் போது கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.