பாரிஸில் உருவான குட்டி யாழ்ப்பாணம் ; தமிழர்களின் போராட்டக் கதை
பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள லா சப்பல் (La Chapelle) பகுதி, 1970களின் இறுதியிலும் 1980களிலும் இலங்கையில் நிலவிய போர்ச் சூழ்நிலை காரணமாக பிரான்ஸ் சென்ற ஈழத்தமிழர்களின் முக்கிய வாழ்விடமாகவும் வணிக மையமாகவும் உருவெடுத்தது.
தாயகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அரிசி மாவு, கறித்தூள், கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பித்த முயற்சிகள், பின்னர் மளிகைக் கடைகளாகவும் தேநீர்க் கடைகளாகவும் வளர்ந்தன.

காலப்போக்கில் மட்டன் ரோல்ஸ், பருப்பு வடை, கொத்துரொட்டி உள்ளிட்ட ஈழத்தமிழர் உணவுகள் பாரிஸில் பிரபலமடைந்து, உணவகங்களும் பெருகின.
ஆரம்பகாலத்தில் மொழிப் பிரச்சினை, இனரீதியான பாகுபாடு, வன்முறைக் குழுக்களின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், தமிழர்கள் தங்களது வணிகங்களை நிலைநிறுத்தினர்.
இன்று பட்டுச் சேலைகள், தங்க நகைகள், மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்கள் என லா சப்பல் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது.