தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை
மன்னார் மூர் வீதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றினுள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பல்வேறு குறைபாடுகளுடனும் இயங்கி வரும் உணவகங்கள் வெதுப்பகங்கள் மீது தொடர்ச்சியாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகரசபை சுகாதார குழுவினர் இணைந்து பல்வேறு சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அதற்கமைய குறித்த உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகஸ்தரினால் மேற்கோள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையில் கண்டறியப்பட்டது.
குறிப்பாக உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை, தலையுறை,கையுறை அணியாமை, அதிகளவான இலையான்கள், கழிவு நீர் உரிய முறையில் அகற்றப்படாமை, அசுத்தமான முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை போன்ற பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மன்னார் நகரசபை பகுதிக்குள் இயங்கி வரும் உணவகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கிவரும் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.