முல்லைத்தீவில் பைப்லைன் மூலமாக கசிப்பு உற்பத்தி; திகைப்பில் பொலிஸார்!
முல்லைத்தீவு - முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து சாராய விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு உற்பத்தி
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கபப்ட்டிருந்தது.
இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்த மாதிரி கோடா உற்பத்தி செய்து சட்டவிரோத கசிப்பு காச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வீட்டிற்குள் சென்ற பொலிஸார் அங்கு நிலத்தில் புதைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானமான கோடாவினை அதன் மேல் பைப்லைன் செய்து வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இரு பெரல் கோடா இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டின் உரிமையாளரை கைதுசெய்த முள்ளியவளை பொலிஸார் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் இன்று சனிக்கிழமை (30) மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
அதேவேளை குறித்த நபர் ஏற்கனவே வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காச்சிய நிலையில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் தனது காணியில் ஆங்காங்கே கசிப்பு காய்ச்சுவதற்கான முதல்நிலை தயாரிப்பான கோடாவினை கலந்து நிலத்தில் புதைத்துவைத்து அதனை நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் கொண்டு எடுத்து வீட்டில் வைத்து கசிப்பு காச்சி விற்பனை செய்துவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.