சொல்லிசை பாடகரை விடுவிக்க கோரி மேல் நீதிமன்றை நாடிய சட்டத்தரணி
கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை இன்று (12) இடம்பெற்றது.
இதன்போது, சொல்லிசை கலைஞன் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி கேசவன் சயந்தன், சாவகச்சேரி பொலிஸார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த B அறிக்கையில் சில சட்ட முரண்பாடுகள் காணப்படுவதாக மன்றில் சுட்டிக்காட்டினார்.
மேலும், சொல்லிசை கலைஞனுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாகவும், இது பாரதூரமான நீதி புரள்வாக அமைந்துள்ளதாகவும் அவர் தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்மனுதாரர்களான சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண மாவட்ட குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும், அறிவித்தல் திரும்பும் திகதியை உடனடியாக நிர்ணயிக்குமாறும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, அறிவித்தல் திரும்பும் திகதியாக எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதியை நீதிமன்றம் நிர்ணயித்ததுடன், வழக்கையும் அத்திகதி வரை ஒத்திவைத்தது.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞன் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும், சொல்லிசை கலைஞனின் கைது அடிப்படை உரிமை மீறலாகும் எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நாளைய தினம் அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.