லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம் ; நிறுவனம் வெளியிட்ட தகவல்
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை, கப்பல் போக்குவரத்துக் கட்டணம், காப்புறுதிக் கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதம் ஆகியன அதிகரித்துள்ளமையால் ஏற்பட்ட மேலதிக செலவுகளை ஈடுசெய்வதற்காகவே லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்தது, இதன் ஊடாக நிறுவனம் மேலதிக இலாபத்தை எதிர்பார்க்கவில்லை என்று லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளிந்த குருகுலசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலை அதிகரிப்பு
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எரிவாயு விலை அதிகரிப்புப் பற்றிப் பேசுவதற்கு முன்னர், கடந்த சில நாட்களாக, கிட்டத்தட்ட ஒரு மாத காலப்பகுதியில் நாட்டுக்கு எரிவாயுவைத் தொடர்ந்து விநியோகிக்க முடியாமல் போனமைக்காக நுகர்வோரிடம் முதலில் மன்னிப்புக் கோருகின்றேன்.
இதனால் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு நிறுவனத்தின் சார்பில் வருந்துகின்றேன்.
லாஃப் நிறுவனம் 2000ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை 25 வருடங்களாக நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுச் செயற்பட்டு வருகின்றது. 2019ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் தெற்காசியாவின் மிகப்பெரிய எரிவாயுச் சேமிப்பு முனையங்களில் ஒன்றை அமைத்தோம்.
எனினும், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் பிணைக்கப்பட்ட சேமிப்பு முனைய ஒழுங்குமுறையின் கீழ் வழங்கப்பட்ட வரிச்சலுகைகளுக்கு அமைவாக, ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு 100 மெற்றிக் தொன் எரிவாயுவுக்கும் 40 மெற்றிக் தொன் மாத்திரமே உள்நாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்ற நிபந்தனை இருந்தது.
கொவிட் பெருந்தொற்று, மக்கள் போராட்டம், டொலர் நெருக்கடி ஆகியவற்றால் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டபோது, ஏற்றுமதிக்கு முன்னுரிமை வழங்காமல் உள்நாட்டு நுகர்வோரின் தேவைக்காகக் கிடைத்த எரிவாயுவை வழங்கினோம்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் அடிப்படையில் ஹம்பாந்தோட்டை முனையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
இது சட்டரீதியான நடவடிக்கையாகும். அம்பாந்தோட்டை முனையத்தில் எரிவாயுவைக் கலக்கும் வசதி இருப்பதால், இலங்கைக்குப் பொருத்தமான புரொப்பேன் 30 சதவீதம், பியூட்டேன் 70 சதவீதம் என்ற கலவையைத் தயாரிக்க முடியும்.
ஆனால், அந்த முனையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதால் கொழும்புக்குக் கப்பல்களில் எரிவாயுவைக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கைக்குத் தேவையான குறிப்பிட்ட கலவையை உலகில் ஒரேயொரு விநியோகஸ்தரே தயாரிக்கின்றனர்.
போட்டி நிறுவனத்துக்கும் எரிவாயு வழங்குகின்றனர். கடந்த வருடத்தின் இறுதியில் ஏற்பட்ட தித்வா புயலின் பின்னர் அம்பாந்தோட்டை முனையத்தை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் வழங்கிய அனுமதி ஓகஸ்ட் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதனால் செப்டெம்பர் மாதத்தில் விநியோகத் தடங்கல் ஏற்பட்டது. தற்போது 3,100 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 3,400 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் மற்றுமொரு கப்பல் அம்பாந்தோட்டையை வந்தடையவுள்ளது.
டிசெம்பர் மாதத்துக்கான கப்பல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எரிவாயுச் சிலிண்டர்களை போட்டி நிறுவனங்களுக்கிடையில் மாற்றிப் பயன்படுத்த முடியாது.
ஒவ்வொரு சிலிண்டரும் பாதுகாப்புப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விநியோகிக்கப்படுகின்றது. அதன் பாதுகாப்புக்கும் தரத்துக்கும் அந்தந்த நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.