இலங்கையில் குகைக்குள் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி ; அமைச்சர் வெளியிட்ட முக்கிய விடயம்
நக்கிள்ஸ் பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவர் பாதுகாப்பற்ற பிரசவத்தின் பின்னர் சிசுவுடன் மீட்கப்பட்ட சம்பவம் ஒரு தாயாகத் தமக்கும் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்கள்
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்த அந்தச் சிறுமியினதும், பிறந்த சிசுவினதும் உயிர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பது ஆறுதலளிக்கிறது.
அவ்விரு பிள்ளைகளினதும் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தையும், எதிர்கால நல்வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்துத் தலையீடுகளையும் துரிதமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை நாம் ஒரு தனிப்பட்ட சம்பவமாகக் கருதவில்லை. தற்போது நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக எமது பிள்ளைகள் பல்வேறு மட்டங்களிலும், பல்வேறு வடிவங்களிலும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.
குறிப்பாக, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய பரஸ்பர பிணைப்பும் தொடர்பாடலும் படிப்படியாகக் குறைவடைந்து செல்வதே இவ்வாறான சம்பவங்களுக்குப் பிரதான காரணமாக அமைகின்றது.
இதன் காரணமாக, பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டிய அவர்களது நெருங்கிய சூழலிலேயே அவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகும் போக்கு உருவாகியுள்ளது.
எத்தகைய சூழ்நிலையிலும் 'தமது பெற்றோரிடம் தாம் பாதுகாப்பாக இருக்கிறோம்' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிள்ளைகள் மத்தியில் கட்டியெழுப்பப் பெற்றோராகிய நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்பதே எனது உணர்வாகும்.
குடும்பத்திற்குள் அவ்வாறான பாதுகாப்பான சூழலையும் வெளிப்படையான உரையாடலையும் ஏற்படுத்துவதன் மூலம், இவ்வாறான ஆபத்தான மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நிகழ்வதைப் பெருமளவில் குறைத்துக்கொள்ள முடியும் என நான் நம்புகிறேன்.
இதுபோன்ற சமூகப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் குறித்து நீண்டகால அடிப்படையில் கவனம் செலுத்தி, பாதுகாப்பற்ற தன்மைக்குள்ளாகும் குழந்தைகளுக்காக முறையான தீர்வாக 2027 ஆம் ஆண்டு முதல் புதிய "மாற்றுப் பாதுகாப்புக்கொள்கையை" செயற்படுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதற்கான அவசியமான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பிள்ளைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் என்பதால், நாட்டின் பிள்ளைகள் குறித்து மிகவும் உணர்வுபூர்வமாகவும் அவதானத்துடனும் செயற்படுமாறு அனைத்துப் பிரஜைகளையும் கேட்டுக்கொள்கிறேன்" என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.