குருநகர் இளைஞன் கொலை விவகாரம்; பதுங்கியிருந்தவர் சிக்கினார்!
யாழ்ப்பாணம் குருநகர் இளைஞன் படுகொலையுடன் தொடர்புடைய வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர், காங்கேசன்துறையில் பதுங்கியிருந்த நிலையில் நேற்றிரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி குருநகர் திருச்சிலுவை சுகநல நிலையத்திற்கு முன்பாக இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
கெமி குழு என்ற ரௌடிக்குழுவினரே தாக்குதல் நடத்தியதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, குறித்த ரௌடிகள் தமது குடும்பங்களுடன் தலைமறைவாகியிருந்தனர். இதை அடுத்து அவர்களிற்கு உதவிய குற்றச்சாட்டில் 5 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் , தலைமறைவாக இருந்த பிரதான சந்தேகநபர்கள் 6 பேர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்தில் யாழ் மாநகரசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினரும், சட்டத்தரணியுமான மு.ரெமீடியஸ் ஊடாக சரணடைந்தனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மற்றுமொரு பிரதான சந்தேகநபரான, யாழ்ப்பாணம், நல்லூரடியை சேர்ந்த ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் தலைமறைவாக பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.