கண்டி வைத்தியசாலையில் விசேட முழங்கால் சத்திர சிகிச்சை; 2 மணி நேரத்திற்குப் பிறகு நடக்க முடியும்
கண்டி தேசிய வைத்தியசாலையில் முழங்கால் மாற்று சத்திரசிகிச்சை கடந்த 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன்,தொடர்ந்து முன்னெடுக்கபப்ட்டு இன்று (19) வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான பௌத்த உறவுகளையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியாவதையும் முன்னிட்டு இந்த சத்திரசிகிச்சை தொடர் மேற்கொள்ளப்பட்டது.

150 மில்லியன் ரூபா நிதி
தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் நடைபெறும் இந்த சத்திரசிகிச்சைக்காக, தாய்லாந்தின் சிரிர்ராஜ் வைத்தியசாலை முதன்மை வகிக்க, அந்நாட்டின் மூன்று பிரதான பௌத்த விகாரைகள் இணைந்து 150 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளன.
இலங்கையின் வைத்தியசாலைகளில் முழங்கால் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், நோயாளி நடப்பதற்கு சில நாட்கள் எடுக்கும் நிலையில், மிகவும் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும் இந்தச் சத்திரசிகிச்சை மூலம் நோயாளி சத்திரசிகிச்சை செய்யப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு நடக்க முடியும்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் எலும்பு முறிவு நிபுணத்துவ வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் உதவியுடனும், தாய்லாந்தின் சிரிர்ராஜ் வைத்தியசாலையைச் சேர்ந்த நிபுணத்துவ வைத்தியர்கள் உட்பட 80 பேர் கொண்ட வைத்தியசாலை ஊழியர்களின் உதவியுடனும் இந்தச் சத்திரசிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.