கிளிநொச்சி பாடசாலை மைதான சுற்றுமதில் ஏன் இப்படி! இது முறைகேடு இல்லையா
கிளிநொச்சி நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கான சுற்றுமதில் அமைக்கும் பணியினை பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து அமைத்துள்ளனர்.
பாடசாலை நிர்வாகத்திற்கும் மதில் அமைப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை நாங்கள் சுற்றுமதிலை அமைத்து பாடசாலையிடம் கையளிப்போம். இதுவே எங்களின் பணி என்றனர் சுற்று மதில் அமைக்கும் பழைய மாணவர்களின் ஒரு தரப்பினர். உண்மையிலேயே நல்ல பணி.
அதிகளவு மாணவர்களை கொண்டுள்ள பாடசாலையில் நீண்ட காலமாக மைதானம் இன்றி காணப்பட்ட நிலையில் குறித்த மைதானம் விடுவிக்க்பபட்டு தற்போது மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளது.
இந்த மைதானத்திற்கு சுற்று மதில் என்பது மிக மிக அவசியமானது. அதனை நிறைவேற்றி வைக்கும் அனைத்து பழைய மாணவர்களும் நன்றிக்குரியவர்கள்.
இது ஒருபுறமிருக்க சுமார் 400 அடிக்கு மேற்பட்ட சுற்று மதில் அமைக்கும் பணியினை இரண்டு தரப்பு மேற்கொள்கிறது. அதில் ஒரு தரப்பினர் 10 அடி மதில் அமைத்து பில்லர் அடிக்கும் வரை 38,399.30 ரூபா இவ்வாறே இன்னொரு தரப்பு 53,389.40 ரூபா செலவு மதிப்பீடு செய்யப்பட்டு இதில் சுமார் 46 ஆயிரம் ரூபா செலவில் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள் செலவு குறைவாக மதில் அமைக்கும் தரப்பினரிடமிருந்து அவர்கள் அமைத்து முடித்த 230 அடி மதில் அமைக்கும் பணியினையும் தங்களிடம் வழங்குமாறு நேரிலும் வேறு வழிகளிலும் நெருக்கடி கொடுத்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செலவு குறைவாக அமைக்கும் தரப்பினரிடம் இவ்வாறு இவர்கள் ஏன் கோரவேண்டும் எனத் தெரியவில்லை இரண்டு தரப்பினரும் ஒரே விதமாக ஒன்றரை அடி அத்திபாரம் கட்டப்பட்டு அதில் மதில் அமைக்கப்பட்டுள்ளது. (படத்தில் மரத்தை முடிவாக கொண்ட மதில் பகுதி செலவு அதிகமாக அமைத்த மதில். கட்டடத்தை முடிவாக கொண்ட மதில் செலவு குறைவாக அமைக்கப்பட்ட மதில்)
அத்தோடு ஐந்து பேரிடம் மதில் அமைப்பதற்கான கேள்வி கோரல் பெறப்பட்ட போது ஏன் அவர்களிடம் பணி வழங்கப்படவில்லை. செலவு குறைவாகவும், உரிய தரத்திலும் அமைக்கும் ஒருவரிடம் ஏன் முழுக் கட்டுமானப் பணியினையும் வழங்கவில்லை? அப்படி வழங்கியிருந்தால் நிதியினை சேமித்திருக்கலாம் அல்லவா?
இந்த நிலையில் தீடிரென கரைச்சி பிரதேச சபையின் கடித தலைப்பில் மொட்டைக் கடிதம் ஒன்று செலவு குறைவாக அமைக்கப்பட்ட மதிலில் ஒட்டப்பட்டது.
செயலாளரின் பெயரில் அவரது ஒப்பம், இறப்பர் முத்திரை எதுவும் இன்றி இக் கடிதம் ஒட்டப்பட்டள்ளது எனவே இக் கடிதத்தி்ன் உண்மைத்தன்மையை அறிவதற்காக கரைச்சி பிரதேச சபையின் செயலாளாருடன் தொடர்பினை மேற்கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து பிரதேச சபையின் அலுவல பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது தான் செயலாளாருடன் கதை்துவிட்டு கூறுவதாக தெரிவித்தவர் பின்னர் அவரும் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.
கரைச்சி பிரதேச சபைக்கு முன்னாள் குறித்த மதில் அமைக்கப்பட்டு 101 நாளில் வந்து ஏன் இந்த கடிதத்தை ஒட்ட வேண்டும்? இந்த கடிதத்திற்கு பின்னால் உள்ள அந்த பாடசாலையின் பழைய மாணவன் என சொல்லப்படுகின்ற அந்த அரசியல் கறுப்பாடு யார்? எனவே இந்த கடிதம் தீடிரென அங்கு செலவு குறைவாக மதில் அமைப்பவர்களை இலக்கு வைத்து ஒட்டப்படுவதற்கு என்ன காரணம்? பாடசாலை நிர்வாகம் இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை? பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திக் குழு இதில் ஏன் அமைதியாக உள்ளதனர் என ஊடகவியாளர் Murukaiya Thamilselvan என்பவர் முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.
