இலங்கையை சீர்குலைத்த டித்வா ; பெரும் பாதிப்பில் மாட்டிக்கொண்ட முக்கிய தரப்பினர்
இலங்கையைத் தாக்கிய 'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, சுமார் 374,000 தொழிலாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த இயற்கை அனர்த்தத்தினால் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு சுமார் 48 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்புகள்
இந்த அறிக்கையின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகள் முடங்கியுள்ளதாகவும், மலையகத்தில் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளால் பெருமளவிலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் விவசாயம் மற்றும் கடற்றொழில்துறை மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், சுமார் 23 சதவீத நெற்பயிர் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேயிலை உற்பத்தியில் 35 சதவீதம் வரை இழப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேயிலை உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை வழங்கும் சிறுதோட்ட உரிமையாளர்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச தொழிலாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இவ்வாறான அனர்த்தங்களின் போது தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய கொள்கைகளில் மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.