லிட்ரோ எரிவாயு தொடர்பில் முக்கிய தீர்மானம்
லிட்ரோ எரிவாயு லங்கா லிமிட்டட் இற்கு வால்வு இல்லாத வெற்று LPG சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்
இதன்படி 2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக, வால்வு (Valve) பொருத்தப்படாத 4 வெவ்வேறு அளவிலான வெற்று எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட விநியோகத்தர்களிடமிருந்து சர்வதேச ரீதியில் போட்டி விலைமனுக் கோரப்பட்டது.
இதன்படி பெறப்பட்ட 4 விலைமனுக்களை மதிப்பீடு செய்த உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு, குறைந்தபட்ச விலையை முன்வைத்த M/s Sahamitr Metal Pressure Containers Public Co. Ltd என்ற நிறுவனத்தைப் பரிந்துரைத்தது.
இந்தக் கொள்வனவின் கீழ், 2.3 கிலோகிராம் எடை கொண்ட 120,000 கொள்கலன்கள்
5.0 கிலோகிராம் எடை கொண்ட 185,000 கொள்கலன்கள்
12.5 கிலோகிராம் எடை கொண்ட 450,000 கொள்கலன்கள்
37.5 கிலோகிராம் எடை கொண்ட 7,000 கொள்கலன்கள், என மொத்தமாக 7 இலட்சத்து 62 ஆயிரம் கொள்கலன்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தற்போது முறையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.