மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்
மறைந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75), மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (17) காலமானார்.
அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருவதுடன், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, கமல்ஹாசனும் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.
அதில், தேவாவின் உற்சாகமான இயல்பு, நகைச்சுவை உணர்வு மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், ‘அவ்வை சண்முகி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய காலங்கள் நினைவில் நிற்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தேவாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார்.