திருமணமாகி சில வாரங்கள்; 27 வயதான இளம் இயக்குநர் ஹோட்டல் அறையில் சடமாக மீட்பு!
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி சில வாரங்களே ஆன நிலையில் இளம் இயக்குநரான பெல்ராஜ் கலாரிக்கல் (27) உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி சில வாரங்கள்
முதற்கட்ட விசாரணைகளின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொலிஸார் இது தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்த இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல், 'நிழல்', 'மதுரம்' மற்றும் 'தாகினி' ஆகிய புகழ்பெற்ற மலையாளத் திரைப்படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அண்மையில் ஜியோ ஹொட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் வெளியான 'கப்பி ஸ்குவாட்' என்ற இணையத் தொடரை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார்.
நான்கு இளைஞர்களின் கனவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாகக் காதலித்து வந்த தனது காதலியை, பெற்றோரின் ஆசியுடன் கடந்த செப்டம்பர் மாதமே திருமணம் செய்த நிலையில் இடம்பெற்றுள்ள இவரது திடீர் மறைவுக்குச் சக கலைஞர்கள், நண்பர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.