1971 ஆண்டு தகர்க்கப்பட்ட காளி கோயில் மீண்டும் புத்துயிர் பெற்றது!
1971 ஆண்டு இடம்பெற்ற போரில் பாகிஸ்தான் இராணுவம் தகர்த்த காளி கோயில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புனரமைக்கப்பட்ட குறித்த காளி கோயிலை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.
பங்களாதேஷின் தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திரப் பொன்விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.
பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றதன் 50வது ஆண்டு விழாவில் பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீதின் அழைப்பை ஏற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்த கொண்டதுடன், 3 நாள் விஜயத்தின் பின்னர் அவர் நாடு திரும்பினார்.
பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற, கடந்த 1971இல் நடந்த போரின் போது, டாக்காவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த ஸ்ரீ ஸ்ரீ ராம்னா காளி கோயில் மற்றும் ஸ்ரீமா ஆனந்தமயி ஆசிரமம் பாகிஸ்தான் இராணுவத்தால் அழிக்கப்பட்டதுடன், பக்தர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் புனரமைக்கப்பட்ட காளி கோயிலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார்.
அதன்பின்னர் டாக்காவில் இந்திய சமூகத்தினர் மத்தியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில்,
“வரலாற்று சிறப்பு மிகுந்த காளி கோயிலை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் படைகளால் இடிக்கப்பட்ட கோயிலை மீட்டெடுக்க இந்திய, பங்களாதேஷ் அரசுகளும், இரு நாட்டு மக்களும் உதவியதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா, பங்களாதேஷ் மக்கள் இடையிலான கலாச்சார மற்றும் ஆன்மீக பிணைப்பின் சின்னமாக இக்கோயில் உள்ளது. அதோடுதனது பங்களாதேஷ் பயணத்தின் ஒரு மங்களகரமான நிகழ்ச்சியாக திறப்பு விழா அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.