அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் வைக்கப்படும் ; பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்தார்.
திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அமைச்சர் , திருகோணமலையில் புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அகற்றப்பட்டதாகவும் அது மீண்டும் இன்று நிறுவப்படும் என்றும் குறிப்பிட்டார்.

புத்தர் சிலை அதே இடத்தில் நிறுவ உடனடி நடவடிக்கை
கரையோர பாதுகாப்பு திணைக்களம் இது தொடர்பில் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்திருந்தது.எனவே இந்த பிரச்சினையில் சட்ட நிலைமை குறித்து நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் புத்தர் சிலை அந்த இடத்தில் நிறுவ உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் நேற்றைய தினம் (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று , புத்தர் சிலை நிறுவப்பட்டது.
புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், நேற்றைய தினம் இரவு , பிக்குகளின் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பொலிஸாரினால் புத்தர் சிலை அகற்றப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மீண்டும் புத்தர் சிலை நிறுவப்படும் என தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.