அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்
வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அடிப்படைச் சம்பள அதிகரிப்பு
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்: நாங்கள் வைத்தியர்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் இந்த மாதத்திலும் அடிப்படைச் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டுள்ளோம்.
இந்த அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக மாத்திரம் இவ்வருடத்தில் 220 பில்லியன் ரூபா செலவாகின்றது. 2025 ஆம் ஆண்டில் 110 பில்லியன் ரூபா செலவானது. இவ்வருடம் 220 பில்லியன் ரூபா செலவாகின்றது. 2027 இல் 330 பில்லியன் ரூபா செலவாகும்.
அந்த அடிப்படைச் சம்பளத்திற்கு அமைவாக மேலதிக நேரம் (OT) அதிகரிக்கின்றது. ஏனைய மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அதிகரிக்கின்றன. விடுமுறை தினக் கொடுப்பனவுகள் அதிகரிக்கின்றன. இவற்றை நாட்டின் பொருளாதார நிலைமைக்குச் சார்பாகவே செய்ய முடியும்," என்று தெரிவித்தார்.