இலங்கையர்களுக்கு குவிந்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு!
2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பணியமர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த எண்ணிக்கையில் அதிகளவான தொழிலாளர்கள் குவைத் நாட்டிற்கு (77,500) கோரப்பட்டுள்ளனர். அதோடு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 63,500 பேரும், கட்டாருக்கு 44,000 பேரும், சவுதி அரேபியாவிற்கு 31,000 பேரும் அனுப்பப்படவுள்ளனர்.

நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஏனைய 17 நாடுகளுக்காகவும் இதற்கான இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் ஊடாக, 2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு 15,000 பேரும், ஜப்பானுக்கு 12,500 பேரும், தென் கொரியாவிற்கு 6,000 பேரும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் 300,000 வேலைவாய்ப்புகள் இலக்கு வைக்கப்பட்ட போதிலும், அந்த இலக்கைத் தாண்டி 311,207 தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 8,000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான புலம்பெயர் வருமானம் கிடைத்துள்ளது.
மேலும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் இதுவரை 20,484 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதாகப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.