அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்கின் தீர்ப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் இழப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்தார்.
வழக்கின் தீர்ப்பு இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவுள்ள நிலையில், மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருது தெரிவித்த அவர் கூறியதாவது, போரின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் போனவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வழங்கப்படவிருந்தன. இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று நீதிமன்றத்தினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கை மீதான வவுனியா மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக இருந்தது. எவ்வாறாயினும், தீர்ப்பு இன்னும் முடிவடையவில்லை என வவுனியா மேல் நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான உத்தரவு அடுத்த மாதம் 14ம் திகதி வெளியிடப்படும். இந்த வழக்கு இலங்கை இராணுவம், அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இழப்புகளுக்கு இலங்கை இராணுவமும் அரசாங்கமும் தான் பொறுப்பு என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ராணுவம் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர். மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட சட்டமா அதிபர் ஜோஹான் அபேவிக்ரமவும் கலந்துகொண்டார்.
வழக்கை தாக்கல் செய்த மனுதாரர்கள், முன்னாள் அமைச்சர் ஆனந்திசசிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.