யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் ; நீதிமன்ற உத்தரவால் CID விசாரணைக்கு செல்லும் வழக்கு
யாழ்ப்பாணம் - கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கில் நேற்று (17) முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

மர்மமான மரணம்
மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கொடிகாமம் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
கடமையில் இருக்க வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த மரணம் சம்பவித்த நேரம் கடமையில் இருக்காமல் சட்டத்திற்கு முரணாக அந்த இடத்தில் நின்றிருந்தார். ஆகவே அந்த மரணத்தில் குடும்பத்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த விடயத்தை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
அந்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அராஜகமும் துஷ்பிரயோகமும் இந்த விடயத்தில் உள்ளதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம். நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.