யாழ். செம்மணி அகழ்வில் மீண்டும் சிறுவர்களின் எச்சங்களா? ; மேலும் 8 என்புக்கூடுகள் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 18ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சிறுவர்களினது எனப் கருதப்படும் இரண்டு என்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாக மேலும் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகழ்வாய்வுகளின் போது புதிதாக 6 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்புக்கூட்டுத் தொகுதிகளில் இருந்து, சிறுவர்களினது எனப் கருதப்படும் இரண்டு என்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாக 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 302 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளதுடன், அவற்றில் 298 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்களினது எனப் கருதப்படும் என்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.