சிறப்பாக நடைபெற்ற யாழ். நயினாதீவு நாக பூசணி அம்மன் தேர்த்திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (28) ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்திர மகோற்சவம் தொடர்ச்சியாக பல்வேறு திருவிழாக்களுடன் இடம்பெற்று வந்த நிலையில், இன்று தேர்த்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது.

அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.
பின்னர் விநாயகர் மற்றும் முருகப் பெருமானுடன் உள் வீதி உலா வந்த அருள்மிகு நாகபூசணி அம்மன், காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.
தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அங்கப் பிரதட்சணம் செய்தும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
ஆலய வளாகம் முழுவதும் பக்தர்களின் பக்தி பரவசத்தால் நிறைந்திருந்தது.
வருடாந்திர மகோற்சவத்தின் நிறைவு நிகழ்வாக நாளை (29) திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்க நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மகோற்சவத்தின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நயினாதீவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், எதிர்வரும் 30ஆம் திகதி வரை அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை படகுச் சேவைகள் இயக்கப்படும் என மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.



