யாழ் மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலை நோயாளர் காவு வண்டி பகலில் ஓடதாம்; நோயாளிகள் அந்தரிப்பு!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலை நோயாளர் காவு வண்டி பகலில் சேவையில் ஈடுபடுவதில்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலைக்கு செல்லும் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நோயாளர் காவு வண்டி ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அந்த நோயாளர் காவு வண்டி இரவில் மட்டும்தான் சேவையில் ஈடுபடும் என்றும், பகலில் நோயாளர் காவு வண்டி வைத்தியசாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆனால் சேவையில் ஈடுபடுவதில்லை என்றும் சிகிச்சை பெற சென்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலையில் சேவையில் ஈடுபடும் நோயாளர் காவு வண்டி சாரதி பகல் வேளையில் குறித்த வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சென்று அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வாகனங்களை செலுத்துவதாக சிகிச்சை பெற சென்றவர்கள் கூறியுள்ளார்கள்.
ஏற்கனவே யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தேவைக்கேற்ப சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலையின் நோயாளர் காவு வண்டி சாரதி செயற்பட்டு வருகின்றாரா எனவும் அதற்கு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர், ச விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.