யாழ். கரவெட்டி பிரதேச சபை விவகாரம் ; நீதிமன்றத்தில் முக்கிய முன்னேற்றம்
யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை அமர்விலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கரவெட்டி பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் பவ கீர்த்தனனுக்கு தலா ரூ.100,000 பெறுமதியான நான்கு ஆட்பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, குறித்த பிரதேச சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் தங்களது அலுவலக வருகையை பதிவு செய்த பின்னர், கடமை நேரத்திலேயே நீதிமன்றத்துக்கு வந்து பிணைக் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அச்சுறுத்தும் வகையில் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடரவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.