யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு ; சுமந்திரனுக்கு அபராத உத்தரவு
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழக்குச் செலவை செலுத்துமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவின்போது, கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயல்பட்டதாகக் கூறி, உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரத்தை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாக எம்.ஏ. சுமந்திரன் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இதனை எதிர்த்து, எந்த மத்தியக்குழு தீர்மானமும் இன்றி தன்னிச்சையாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறி, குறித்த உறுப்பினர் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, சி.வீ.கே சிவஞானம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர், வழக்குத் தாக்கல் செய்ததே தவறு எனக் கூறி எழுத்துமூல ஆட்சேபனையை மன்றில் சமர்ப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், வழக்கு நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த ஆட்சேபனை தவறானது என நீதிமன்றம் அறிவித்ததுடன், அதற்கான வழக்குச் செலவாக இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.