யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பரபரப்பு ; எம்.பிக்கள் இடையே தொடர் வாக்குவாதம்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது இன்று குழப்பநிலை ஏற்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களான, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைமை பீடத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் பேரிடர் நிவாரணம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உரையாற்ற முற்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் குறுக்கிட்டார்.
இதன்போது, தனக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்த போது, அதற்கு இடைநடுவே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறுக்கிட்ட நிலையில் இந்த குழப்பநிலை ஏற்பட்டது.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தின் மருத்துவமனைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மாற்றுக்கருத்து ஒன்றை முன்வைத்தார் இதன்போது இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தல் ஒன்றுக்காக முயற்சித்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறுக்கிட்டார் இதன்போது ஆத்திரமடைந்த மக்கள் பிரதிநிதிகள், தமது எதிர்ப்பை வெளியிட்டனர்