யாழ்ப்பாணம்- மட்டக்களப்பு சுகாதார பரிசோதகர்களுக்கு தென்னிலங்கையில் நடந்த சோகம்
களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணத்தைச் சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள் ஆவர்.
நீராட சென்றபோது துயரம்
மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு நீராடச் சென்ற போதே இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
மேலும் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.