யாழ்ப்பாணத்தில் யாழ்கோ நிறுவனம் ஏற்படுத்திய குழப்பம் ; 54 மில்லியன் ரூபா உலக வங்கி நிதி ஆபத்தில்
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள யாழ்க்கோ நிறுவனத்திற்கு உலக வங்கி மானியமாக வழங்க முன்வந்த 54 மில்லியன் ரூபாவிற்கான திட்டத்தை நிறைவேற்ற முடியாது எனக்கூறி யாழ்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிறுவனத்தினர் தெரிவித்ததால் பணம் திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலில் 'யாழ்க்கோ' தலைவர் காந்தகுமார் இதனைத் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் உலக வங்கி பிரதிநிதிகள், மாவட்ட அரச அதிபர், கால் நடை அமைச்சின் அதிகாரிகள், மாகாண கால் நடை அமைச்சு, இத் திட்டத்தை முதலில் திட்டமிட்டவர்கள் எனப் பல முக்கிய அதிகாரிகள் இருந்தபோதும் 'யாழ்க்கோ' மறுத்தமையால் மாவட்ட அரச அதிபரும் பின் வாங்கும் நிலை ஏற்பட்டது
அதன் காரணமாக பால் பதனிட்டு பொதி செய்யும் நிலையத்தின் கட்டிட அமைப்பின்கு உலக வங்கி இலவசமாக வழங்க முன் வந்த உலக வங்கி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிறுவனமே மறுக்கும்போது பணத்தை வழங்க முடியாது எனக் கையை விரித்து விட்டனர்.
யாழ்ப்பாணத்தில் 'யாழ்க்கோ' பால் பதனிடல் நிலையம் அமைத்தால் நாள் ஒன்றிற்கு 6 ஆயிரம் லீற்றர் பால் பொதியிட முடியும் இதன் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கே எடுத்துச் செல்லப்பட்டு பொதி செய்து மீண்டும் எடுத்து வரும் நிலை தடுக்கப்படும் என்பதோடு பால் சாதாரண கைகளாலும், இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லும்போது தரத்தில் குறை ஏற்படுவதும் குறைக்கப்படும் என திட்டமிட்ட அதிகாரிகள் விளக்கமளித்தபோதும் இவ்வாறான நிலையம் அமைந்தால் யாழ்க்கோவின் கீழ் தற்போது பால் சந்தைப்படுத்தல் நிலையங்களாக உள்ள 23 கிளை நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பெறும் எனவும் அறியப்பெறுகின்றது