சபரிமலை யாத்திரைக்கு சென்ற யாழ் பக்தருக்கு விமானத்தில் நேர்ந்த கதி!
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையைச் சேர்ந்த ஒருவர் கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளார்.
சபரிமலை யாத்திரைக்காக விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் 49 வயதுடைய மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விமானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் அவரது உடல்நிலை மோசமானதால், இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவசர கால மருத்துவ உதவி
விமானம் சென்னையில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி குறித்த நபரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல வந்த மோகனதாஸ் இறந்ததால், அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.