கண்ணாடிக்குள் ஒளிந்த கேமரா ; பொது இடங்களில் பெண்களுக்கு நேரும் பயங்கரம்
தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் மனித குலத்திற்கு நன்மைகளைத் தந்தாலும், மறுபுறம் அது பெண்களின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறி வருகிறது.
குறிப்பாக, மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்திய 'ஸ்மார்ட் கிளாஸ்' (Smart Glasses) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொது இடங்களில் பெண்களை அவர்களுக்குத் தெரியாமலேயே ஆபாசமாகப் படம்பிடித்து இணையத்தில் பதிவிடும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாதாரண கண்ணாடி போலவே தோற்றமளிக்கும் இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்யும் வசதி கொண்டவை.

இதனைப் பயன்படுத்தும் சில சமூக விரோதிகள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்களை ஆபாசமான கோணங்களில் படம்பிடிக்கின்றனர்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் நூற்றுக்கணக்கான காணொளிகள் ஆபாச இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கண்ணாடிகளைத் தயாரிக்கும் மெட்டா (Meta) நிறுவனம், "காணொளி பதிவு செய்யப்படும்போது கண்ணாடியில் உள்ள சிறிய எல்.இ.டி (LED) விளக்கு ஒளிரும்.
இதன் மூலம் மற்றவர்கள் தாங்கள் படம்பிடிக்கப்படுவதை உணர முடியும்" என்று பாதுகாப்பு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி (BBC) நடத்திய ஆய்வில் இந்த வாதம் முறியடிக்கப்பட்டுள்ளது.

மிக எளிமையான முறைகளைக் கையாண்டு, அந்த எச்சரிக்கை விளக்கு வெளியாட்களுக்குத் தெரியாதவாறு மறைக்க முடியும் என்பதையும், எவ்வித அறிகுறியும் இன்றி இரகசியமாகத் தொடர்ந்து காணொளி பதிவு செய்ய முடியும் என்பதையும் பிபிசி ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளது.
இணையத்தில் தங்களின் காணொளிகள் பரவுவதை அறியும் பெண்கள், சொல்லொணா மன உளைச்சலுக்கும் சமூகச் சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர்.
இது போன்ற தொழில்நுட்பக் கருவிகள் தனிமனித சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்குவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது போன்ற கருவிகளைப் பொது இடங்களில் பயன்படுத்துவதற்குப் பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.