விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க
முழுமுதற் கடவுளான விநாயகர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

என்ன தான் ஒவ்வொரு மாததும் சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாத சதுர்த்தி திதியில் தான் விநாயகர் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி ஒரு நாள் மட்டுமின்றி 10 நாட்கள் வரை கொண்டாடப்படும்.
அதுவும் இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை வாங்கி வந்து, அவருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், லட்டு போன்றவற்றை செய்து படைத்து, விநாயகருக்கு உகந்த பூக்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளை செய்து மக்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள். தெய்வங்களிலேயே விநாயகர் எளிதில் திருப்தி அடையக்கூடியவர் ஆவார்.
அந்த வகையில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14 ஆம் திகதி வருகிறது. இந்நாளில் விநாயகரை வழிபடும் போது, எந்த பொருட்களை படைக்கக்கூடாது என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

துளசியை படைக்காதீர்
விநாயகருக்கு துளசி இலைகளை படைக்கக்கூடாது. ஏனெனில் ஒருமுறை துளசி தேவி விநாயகரை கணவனாக அடைய வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் விநாயகரோ அதை நிராகரித்தார். இதனால் கோபம் கொண்ட துளசி விநாயகருக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்று சபித்தார். இந்த சாபத்தை கேட்ட விநாயகர் கோபமுற்று, "நீயும் ஒரு அசுரனை திருமணம் செய்ய வேண்டியிருக்கும் என்றும், இனி என் வழிபாட்டில் ஒருபோதும் நீ பயன்படுத்தப்படமாட்டாய்" என்று சாபமிட்டார். இதனால் தான் துளசி விநாயகர் வழிபாட்டில் இடம் பெறுவதில்லை.

தாழம்பூ
தாழம்பூ சிவபெருமானுக்கு படைக்க தடைசெய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். அதேப் போல் விநாயகருக்கும் தாழம்பூவை படைக்கக்கூடாது. ஏனெனில் புராணங்களின் படி, விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் உயர்ந்தவர் என்ற ஒரு போர் நடந்தது. அப்போது சிவன் ஒரு வழியை கண்டுபிடித்தார். ஆனால் பிரம்மாவும், தாழம்பூவை பயன்படுத்தி சிவனை ஏமாற்ற நினைத்தார். இருப்பினும், சிவனை பிரம்மாவின் தந்திரத்தை உணர்ந்து கோபமடைந்து, இனிமேல் தனது வழிபாட்டில் தாழம்பூ இடம் பெறாது என்று சபித்தார். சிவனின் மகன் விநாயகர் என்பதால், விநாயகரின் பூஜையிலும் தாழம்பூ தடைசெய்யப்பட்டுள்ளது.

உடைத்த அரிசி
விநாயகரின் பூஜைக்கு அட்சதையாக அரிசியை பயன்படுத்தும் போது, உடைத்த அரிசியை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். முழுமையான மற்றும் சுத்தமான அரிசியை விநாயகரின் பூஜைக்கு பயன்படுத்துங்கள்.

வெள்ளை ஆடைகள் கூடாது
விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை சமர்ப்பிக்கக்கூடாது. வெள்ளை நிறமானது சந்திரனைக் குறிக்கிறது. புராணங்களின் படி, சந்திர பகவான் தனது அழகால் மிகவும் கர்வம் கொண்டிருந்தார். அப்போது அவர் விநாயகரை கேலி செய்தார். சந்திர பகவானின் நடத்தையால் கோபமடைந்த விநாயகர், "இனிமேல் இவரை காண்பவர் எவரும் சமூகத்தில் அவமானத்தையும், இழிவையும் சந்திப்பார்கள்" என்று சபித்தார். எனவே தான் விநாயகர் சதுர்த்தி நாளில் சந்திரனை காண்பது தடைசெய்யப்பட்டதாக கருதப்படுகிறது. சந்திரனின் நிறம் வெள்ளை என்பதால், விநாயகருக்கு வெள்ளை நிற ஆடைகள் படைக்கப்படுவதில்லை.

பழைய அல்லது நீரில் கழுவிய பூக்கள் கூடாது
விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு வாடிய அல்லது பழைய பூக்களை சமர்ப்பிக்கும் தவறை செய்யக்கூடாது. அதேப் போல் பூக்களை நீரில் கழுவி சமர்ப்பிக்கக்கூடாது. எப்போதும் எந்த ஒரு பூஜையிலும் பயன்படுத்தும் பூக்கள் நீரில் கழுவப்படாத நிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
