தீவிரமடையும் ஈரான் - இஸ்ரேல்... எரிபொருள் நிலையத்திற்கு முன் குவிந்த வாகனங்கள்!
இஸ்ரேல் - ஈரான் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரானின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
போர் சூழல் தீவிரமடைந்தால் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்று கருதி எரிபொருள் நிரப்பும் பொருட்டு அங்குள்ள மக்கள் இவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் வாகனங்களில் காத்திருக்கின்றனர்.
இதேவேளை, சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் விதமாக நேற்றையதினம் இரவில் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.
மேலும், கடந்த நாட்களில், தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து வந்த ஈரான் நேற்று இரவில், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியதாகவும், இதனை முறியடிக்கும் முயற்சியில் அந்நாஅடு ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.