திருகோணமலை விகாரை விவகாரம் ; எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை உரித்தானது எனக்கூறப்படும் கட்டுமானத்தை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய கட்டளையை வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விகாரைக்கு உரித்தானது என கூறப்படும் இந்த பகுதி சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, அதனை அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் உத்தரவிட்டிருந்தது.

சமரசத் தீர்வு
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் விகாரையின் விகாரதிபதி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக கனேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலிக்கப்பட்டது.
அதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுசந்த பாலபட்டபெந்திகே, இந்த வழக்கை சமரசமாகத் தீர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
விகாரையின் ஒரு பகுதியை அகற்றுமாறு விடுக்கப்பட்ட கட்டளையைத் திரும்பப் பெற பிரதிவாதிகள் இணங்கியுள்ளதாகவும், அதற்குப் பதிலாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டு செயற்பட மனுதாரர் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் மனோஹர ஜயசிங்க, இந்த இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
இரு தரப்பினரின் கருத்துக்களையும் ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், இந்தச் சமரச நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வழக்கை பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது. அன்றைய தினம் சமரசத் தீர்வு எட்டப்பட்ட விதம் குறித்து நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டது.