பத்மேவுடனான நட்புக்கு வழிவகுத்த இஷாராவின் முன்னாள் காதல்
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப் பிரிவினரிடம் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தனது முன்னாள் காதலரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலம் 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை 'பத்மே' தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா கூறியுள்ளார்.
"எப்படியாவது அவனை வைத்து வேலையை முடித்துக்கொள்" என்று 'பத்மே' தன்னிடம் கூறியதாகவும், அதன்படி சமிந்து தில்ஷானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, கொலையைச் செய்யுமாறு தான் அவரைத் தூண்டியதாகவும் இஷாரா செவ்வந்தி அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்திற்காக தான் எந்தவித பணமும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே,இஷாரா செவ்வந்தி காவல்துறைப் பிடியிலிருந்து மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (17) மூன்று பேரை கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரில், அளுத்கம காவல்துறையில் பணிபுரியும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிளும் அடங்குவார். கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு, குறித்த காவல்துறை கான்ஸ்டபிளின் மனைவியின் தாயார் தங்கியிருந்த வீட்டில் இஷாரா செவ்வந்தி ஒன்றரை நாட்கள் மறைந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்தக் காவல்துறை கான்ஸ்டபிளும் அவரது மனைவியின் தாயாரும் கொழும்பு குற்றப் பிரிவால் அழைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக் குழு ஒன்று இஷாரா செவ்வந்தியுடன் நேற்று தொட்டங்கொட பகுதிக்குச் சென்று, அங்கு அவருக்கு அடைக்கலம் கொடுத்த வேறொரு நபரையும் கைது செய்தது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னர் தப்பிச் சென்ற இஷாரா செவ்வந்தி, அந்த நபரின் வீட்டில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த நபர், தற்போது வெளிநாட்டில் இருக்கும் 'மத்துகம ஷான்' எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் பாடசாலை நண்பர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நிதிக்குற்றப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாமடல பிரதேசத்தில் டி56 ரக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களுடன் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து டி56 துப்பாக்கிக்கான 63 தோட்டாக்கள், இரண்டு மகசின்கள் , 12 போர் ரக துப்பாக்கிகள் 2, அதற்கான 25 தோட்டாக்கள் மற்றும் ரிவோல்வர் துப்பாக்கிக்கான 34 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.