அமெரிக்கா தமிழரசுக் கட்சியில் சில உறுப்பினர்களை மாத்திரம் அழைத்துப் பேசுகின்றதா?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள். விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு ஆசனம். வடக்குக் கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் முன்னணிக்கு 92 ஆசனங்கள், கூட்டணிக்கு 82 ஆசனங்கள்.
ஆகவே தமிழ்த்தேசிய அரசியலில் ஈழத்தமிழர்களின் கணிசமான செல்வாக்கைப் பெற்ற இந்த இரு கட்சிகளையும் புறம்தள்ளி அமெரிக்கா தனியே அதுவும் தமிழரசுக் கட்சியில் சில உறுப்பினர்களை மாத்திரம் அழைத்துப் பேசுகின்றதா? என ஊடகவியலாளர் நிக்சன் அமிர்தநாயகம் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகள் கூட நோர்வேயின் ஏற்பாட்டில் இலங்கை அரசாங்கத்தோடுதான் பேசினார்கள். ஆனால் இவர்கள் அமெரிக்காவோடு மாத்திரம் பேசுகிறார்களே! தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றிப் யாழ்ப்பாணத்தில் பேசுகின்றன.
அதுவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனே கணேசன் அணியையும் இணைத்துக் கொண்ட பேச்சுக்கள் அவை. ஆகவே இந்தப் பேச்சுக்கள் எல்லாம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரியாமலா இடம்பெறுகின்றன? அப்படி இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிந்திருந்தால், இந்தப் பேச்சுக்களின் அடிப்படை எதுவாக இருக்கும்? நிச்சயமாக இந்தச் சந்திப்புகள், இலங்கை அரசாங்கம்- தமிழ்த்தேசியக் கட்சிகள் என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடாக இருக்கவே இருக்காது.
13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தும் பேச்சுக்களாகவும் இது இருக்க வாய்ப்பேயில்லை. இது வெறுமனே, இலங்கை அரசாங்கத்தை அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை (Sri Lankan Unitary State Constitution) தமிழர்கள் ஏற்றக வேண்டும். அல்லது இலங்கையின் இறைமைக் கட்டமைப்புக்கு ஏற்ற, அதுவும் நிர்வாக ரீதியான அதிகாரப் பரவலாக்கலை மாத்திரம் செயற்படுத்தும் நோக்கிலான அழுத்தங்கள் மாத்திரமே இதனைப் பேச்சுவார்த்தை என்றே கூற முடியாது.
சாணக்கியன் கனடாவில் உரையாற்றும்போது சொன்ன ஒருவார்த்தையை அவதானிக்க வேண்டும். அதாவது எந்தவொரு தீர்வும் சிங்கள மக்கள் விரும்பாமல் நடைமுறைக்கு வராது என்பதே. எனவே, இலங்கை ஒற்றையாட்சிக்குள் வரும் அரசியல் தீர்வை ஏற்க வேண்டிய நிலைமைதான் என்பதையே சாணக்கியன் கூற்று எடுத்துக் காட்டுகின்றதல்லவா.
அரசியல் தீர்வுக்காக வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்பை (North East Combined Autonomous Structure) உருவாக்கும் பேச்சுக்கள் என்றால், நிச்சியமாக கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் ஆகியோரையும் மற்றும் முஸலிம் பிரநிதிகளில் ஒருவரையாவது அழைத்துப் பேசியிக்க வேண்டுமே.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் பிரநிதியும் அல்லவா பங்குபற்றியிருக்க வேண்டும்? ஆனால் இங்கே இவர்கள் எவரும் இல்லாதவொரு பின்னணியில், தனியே சட்டத்தரணி சுமந்திரன் தலைமையிலான குழு மாத்திரம் பேசுவதற்குச் சென்றிருக்கின்றது என்றால் அதன் அர்த்தம் என்ன? அதுவும் அமெரிக்காவில். புவிசார் அரசியலில் இலங்கை கட்டுமீறிவிட்டது.
இது அமெரிக்க இந்திய அரசுகளுக்குப் பெரும் தலையிடி. அந்தத் தலையிடியைப் போக்க இலங்கை இந்த நாடுகளுக்கு முன்வைத்த நிபந்தணை என்ன? ஈழத்தமிழர் விவகாரம் ஜெனீவாவில் கூடப் பேசப்படக்கூடாது.
இருக்கின்ற 13 அல்லது புதிய அரசியல் யாப்போடு தமிழர் பிரச்சினை அடங்கிவிட வேண்டும். அதற்கேற்ப நகர்த்தித் தாருங்கள் என்பதே கோட்டாபய, ரணில் - சஜித் ஆகியோரின் வேண்டுதல்.
2015 ரணில் - மைத்திரி அரசாங்கத்தில் ஒரு பகுதி நிறைவேறியுள்ளது. மற்றைய பகுதி ராஜபக்சக்களின் அரசாங்கத்தில் செயற்படுத்துகின்றன. இதுதான் அமெரிக்கப் பேச்சு. என குறித்த கருத்துக்களை ஊடகவியலாளர் நிக்சன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.