திருகோணமலை புத்தரை சர்ச்சையாக்கியது பொலிஸாரே; குடை பிடித்ததை மறந்து தேரர் குற்றச்சாட்டு
சம்புத்த ஜயந்தி விகாரை விடயத்தில் திருகோணமலை பொலிஸ் அதிகாரிகளே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்கள் என என்று ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதன்போது தேரர் மேலும் கூறுகையில்,

இனவாத செயற்பாடுகளோ, மதவாத செயற்பாடுகளோ இடம்பெறவில்லை
1951ஆம் ஆண்டு ஆரம்பிக்கவிருந்த திருகோணமலையின் முதலாவது ஸ்ரீபோதிவர்தன அறநெறி பாடசாலைக்குரிய கட்டடப் பகுதியொன்று கடந்த 2004 ஆம் ஆண்டு சேதத்துக்குள்ளானது.
அந்தக் கட்டடத்தை மீள நிர்மாணித்து திருமலை நகரிலுள்ள பிள்ளைகளுக்கு அறநெறிக் கல்வியை வழங்குவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்கி கொடுக்கவே முயற்சித்தோம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அன்றிரவு பொலிஸ் அதிகாரிகள் வந்து எங்களின் விகாரையை சுற்றிவளைத்து, அவசியமின்றி விகாரைக்குள் நுழைந்து, பிக்குகளை தாக்கி, அங்கிருந்த புத்தர் சிலையையும் கடத்திச் சென்றார்கள்.

அதன்போது தாக்குதலுக்குள்ளான நானும் இன்னுமொரு தேரரும் மூன்றுநாள் சிகிச்சையின் பின்னரே இன்றே திரும்பி வந்தோம்.
1951 ஆம் ஆண்டு முதல் வரலாறுள்ள இந்த விகாரையில் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளோ, இனவாத செயற்பாடுகளோ, மதவாத செயற்பாடுகளோ இடம்பெறவில்லை.
திருகோணமலை பொலிஸ் அதிகாரிகளே இந்த விடயத்தில் தலையிட்டார்கள். திடீரென ஏற்பட்ட மர்மத்தின் பின்னணியிலேயே இப்படியொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று எண்ணுகிறோம்.

தொடர்ச்சியாக எங்களுக்கு அச்சுறுத்தல்
இதுதொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுப்போம். பகல் நேரத்தில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யவே நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆனாலும், கரையோரப் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அங்கிருந்த சகல பொலிஸ் அதிகாரிகளும் தொடர்ச்சியாக எங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள்.
கைதுசெய்வதாக அச்சுறுத்தினார்கள். அதற்கான சாட்சி வீடியோக்கள் எங்களிடம் இருக்கின்றன. இந்த பிரச்சினையுடனேயே சிலை பிரதிஷ்டை செய்யும் பணிகள் காலதாமதமாகின.
அவசியமின்றி நாங்கள் எதனையும் செய்யவில்லை. விகாரைக்கும் அறநெறிக்கும் அனுமதியுடைய, சகலரும் அறிந்த இடம். அதன் அடிப்படையிலேயே இந்த அறநெறியை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தோம். மகேந்தரவங்ச தேரர் உயிரிழந்ததை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நான் விகாராதிபதியாக நியமிக்கப்பட்டேன்.

அன்றிலிருந்து இளைஞர் பிக்குகள் சங்கத்தின் இணக்கத்துடனேயே விற்பனை நிலையத்தை நிர்மாணித்தோம். விகாரைக்கு உதவி வழங்க யாரும் இல்லாததால் அதனூடாக அறநெறி பாடசாலையை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்தோம்.
ஆனாலும் எங்களுக்கு சேறுபூசுகிறார்கள். விகாரையின் தர்ம மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான நிதி வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அந்த இணக்கப்பாட்டுக்கமைய வர்த்தக நிலையத்தை மீண்டும் நீக்கவும் எதிர்பார்க்கிறோம். இந்த இடத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு சகல மக்களிடமும் கோருகிறோம் என்றும் விகாராதிபதி கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
அதேவேளை இரவில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அடுத்தநாள் காலை கடும் பொலிஸ் பாதுகாப்புடன், , பொலிஸார் குடைபிடிக்க மீண்டும் எடுக்கப்பட்ட இடத்தில் பிரதிக்ஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.