வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம்; நியூசிலாந்துப் பெண் குறித்தும் விசாரணை
இலங்கைக்கு சுற்றுலா வந்த நிலையில், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நியூசிலாந்துப் பெண் ஒருவருக்கு முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
செல்லுபடியான முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி நாட்டில் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு போக்குவரத்துத் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
இந்நிலையில் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தாலும், அதில் முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவதற்கான உரிய வகையின் கீழ் அனுமதி இல்லையென்றால், நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்குத் தற்காலிக முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது.
அதற்கமைய, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் உரிய வகையின் கீழ் முச்சக்கர வண்டிகளைச் செலுத்த விரும்பினால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாகத் தற்காலிக முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கிடையில், அண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நியூசிலாந்துப் பெண் ஒருவருக்கு முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது என்பது குறித்தும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு வாடகை அடிப்படையில் முச்சக்கர வண்டிகளை வழங்குவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக முச்சக்கர வண்டிகளை வழங்கும் உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.