கொழும்பு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணின் மரணத்திற்கு விஷ வாயுதான் காரணமா?
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய பெண் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ள சம்பவத்திற்கான காரணம் நச்சு வாயுவை சுவாசித்ததா அல்லது உணவு விஷமானதா என்பது தொடர்பில் காவல்துறையின் விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி ஆர். ஏ. டிமெல் மாவத்தையில் உள்ள விடுதியொன்றில் வெளிநாட்டு பிரஜைகள் மூவர் கடந்த 30 ஆம் திகதி தங்கியுள்ளனர்.
இதில் 30 வயதுடைய ஜேர்மன் நாட்டு பிரஜை, அவரது 27 வயதான மனைவி மற்றும் 24 வயதான பிரித்தானிய பெண் ஒருவர் அடங்குகின்றனர்.
குறித்த விடுதியின் 3ஆவது மாடியில் உள்ள அறை ஒன்றில் மூவரும் தங்கியிருந்த நிலையில், நேற்று அவர்கள் திடீர் சுகவீனம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து மூவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், பிரித்தானிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த அறை காவல்துறையால் முத்திரையிடப்பட்டதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே குறித்த விடுதியில் தங்கியுள்ள ஏனைய சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களை வெளியேற்றுமாறு காவல்துறையினர் விடுதி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி, அங்கிருந்த 18 சுற்றுலாப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.