உடம்பில் இரத்தம் வழிந்து, அங்கிகள் கழறும் வரை பொலிஸார் தாக்கினார்கள் ; கஸ்ஸப தேரர்
எங்கள் உடம்பில் இரத்தம் வழிந்தது, எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதற்குப் பிறகு சிறையில் உயர் அதிகாரி ஒருவர் 'உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்' என்று தங்களை மிரட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

போராட்டத்தை கைவிட மாட்டோம்
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு - கிழக்கு மகா சங்கத்தினர் உட்பட சிங்கள பௌத்த சமூகம் பல துன்பங்களுடன் வாழ்கிறது. வரலாற்று ரீதியாக வடக்கு மக்களிடம் மிகவும் சுய கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம்.
அன்றைய தினம் புத்த சிலையை வைத்து பிரித் சொல்லி மக்கள் சென்ற பிறகு பொலிஸ் அதிகாரிகள் 200 பேர் வரையில் அவ்விடத்தை சுற்றிவளைத்தனர்.
இதன்போது ஏன் சுற்றிவளைக்கிறீர்கள் என கேட்டபோதும் பதில் கிடைக்கவில்லை. உள்ளே வருவதற்கான கதவுகள் இருக்கும் போதும் கம்பி வேலிகளை வெட்டி உள்ளே வந்து எங்களை அடித்தார்கள். புத்தர் சிலையை பறித்து கொண்டு சென்றார்கள்.
நாம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அடித்தார்கள். எமது உடம்பிலிருந்து இரத்தம் வழிந்தது. எது நடந்தாலும் நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.