கேள்வி கேட்கும் திறனை இழக்கும் மனித இனம்? AI குறித்து புதிய எச்சரிக்கை
கேள்விகளுக்கும் சிக்கலான பிரச்சினைகளுக்கும் உடனடியாகப் பதில்களை வழங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் வேகமான வளர்ச்சி, மனிதர்களின் புத்திக்கூர்மை மற்றும் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கக்கூடும் என Royal Observatory Greenwich எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவின் மிகப் பழமையான அறிவியல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்த வானியல் ஆய்வு மையத்தை நிர்வகிக்கும் Royal Museums Greenwich குழுமத்தின் பணிப்பாளர் Paddy Rodgers இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், மனிதர்களின் தேடல் ஆர்வமும் அறிவைப் பற்றிய ஆய்வுகளும் வரலாற்றில் பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஏஐ தொழில்நுட்பங்களின் மீது முழுமையான சார்புநிலை உருவாகுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், “உடனடிப் பதில்களை மட்டுமே நம்பும் நிலை உருவானால், கேள்வி கேட்கும் மற்றும் தகவல்களை மதிப்பிடும் மனிதப் பழக்கவழக்கங்கள் குறைந்து விடும் அபாயம் உள்ளது” என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த 350 ஆண்டுகளாக வானியலாளர்கள் சேகரித்த தகவல்கள் பின்னர் கடல் வழிப் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் ஆதாரமாக அமைந்ததாகவும், அக்கால மனிதர்கள் செய்த நுணுக்கமான ஆய்வுகளை இயந்திரங்கள் மேற்கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கூகுள் போன்ற தேடுபொறிகள் வழியாக மக்கள் மூல ஆதாரங்களைச் சரிபார்க்கும் வாய்ப்பு இருந்தபோதிலும், தற்போதைய ஏஐ கருவிகளின் உடனடி பதில்கள் மனிதர்களை மூலத் தகவல்களிலிருந்து விலக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, London School of Economics தகவல் அமைப்புகளுக்கான உதவிப் பேராசிரியர் Anushka Schmidt கருத்து தெரிவிக்கையில்,
“அறிவாற்றல் அவுட்சோர்சிங்” எனப்படும் சிந்தனையை இயந்திரங்களிடம் ஒப்படைக்கும் நடைமுறை காரணமாக, மனிதர்களின் நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் சுய சிந்தனை திறன்கள் பாதிக்கப்படுகின்றன” என தெரிவித்தார்.
அதேவேளை, ஏஐ தொழில்நுட்பம் அறிவியல் உலகில் பல முன்னேற்றங்களையும் ஏற்படுத்தியுள்ள போதிலும், அதன் பயன்பாட்டில் சமநிலையான அணுகுமுறை அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.