16 பேரை பலி கொண்ட எல்ல பேருந்து விபத்தின் விசாரணை நிறைவு
எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.
குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த இரண்டு நாட்களுக்குள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற பேருந்து, கடந்த 4 ஆம் திகதி இரவு எல்ல-வெல்லவாய வீதியில் 24வது கிலோ மீட்டர் மைல்கல் அருகே பள்ளத்தாக்கில் விழுந்தது.
விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 16 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து விசாரிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
விபத்து குறித்து விரிவான விசாரணைகளை நடத்திய பின்னர் குழு தனது அறிக்கையை தயாரித்துள்ளதாக குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த குழு அறிக்கையின்படி, விபத்தில் சிக்கிய பேருந்து முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், பிரேக்கிங் அமைப்பில் குறைபாடுகள் இருந்தன என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் வீதி குறித்து சரியான அறிவு இல்லாமல் பேருந்தின் சாரதி செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விபத்து நடந்த நேரத்தில் பேருந்துக்கு முன்னால் வந்த சொகுசு காரின் கெமரா தரவு பதிவு எதுவும் இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக காரின் நிறுவனத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டதாகவும், அந்த அறிக்கையின்படி, சர்ச்சைக்குள்ளான காரின் கெமரா அமைப்பில் எந்த தரவும் சேமிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எல்ல பொலிஸ் நிலைத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.