யாழில் இடம்பெற்ற கோர விபத்து ; பரிதாபமாக பெண் ஒருவர் பலி
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்றுள்ளது.
அதாவது குடும்பப் பெண்ணும் அவரது உறவு முறையான இளைஞர் ஒருவரும் மோட்டார் சைகிளில் கச்சாய் வீதி ஊடாக கொடிகாமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, அதே திசையில் சட்டவிரோத மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரம் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்தில் கெற்பேலி மேற்கு மிருசுவிலைச் சேர்ந்த நந்தகுமார் ஜெயலக்சுமி என்ற 46 வயதுடைய குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை உறவு முறை இளைஞரான 22 வயதுடைய கனகலிங்கம் செந்தூரன் என்பவர் படு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகைச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.