தாலிகட்டும் நேரத்தில் காதலனை கண்டு மாப்பிள்ளையை உதறித்தள்ளிய மணப்பெண்!; உறவினர்கள் ஷாக்!
தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் காதலனை திருமண செய்துகொள்வதாக கூறி காதலனை கடி அணித்ததால் திருமணம் நின்றுபோயுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சினிமா காதல் காட்சியையே மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் மைலாரம் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் இளம் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவர, அங்கு புயல் வீசத் தொடங்கியது.

இவருடன் மட்டுமே வாழ விரும்புகிறேன்
காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அவசர அவசரமாக வேறு ஒரு இளைஞரை தேடிப்பிடித்து திருமண நிச்சயதார்த்தத்தை முடித்தனர். கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (08) அன்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விழா களைகட்டியது.
மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் என ஒட்டுமொத்த பேரும் கல்யாண மண்டபத்தில் குவிந்தனர். மண்டபமே விழாக்கோலம் பூண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. மறுநாள் காலை, திருமண முகூர்த்த நேரம் நெருங்கியது. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் பட்டு உடையில் ஜொலி ஜொலிக்க, மணமேடையில் உட்கார வைக்கப்பட்டனர்.
மணமகன் தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்டப்போகும் அந்த விநாடி, திடீரென இளைஞர் ஒருவர் கூட்டத்திலிருந்து ஓடி வந்து மணமேடையின் முன்பாக நின்றார். இளைஞரை பார்த்ததுமே மணமேடையில் உட்கார்ந்திருந்த மணப்பெண், சற்றும் யோசிக்காமல் அங்கிருந்து எழுந்து ஓடினார்.
"நீ வந்து விட்டாயா?" என்று நெகிழ்ச்சியுடன் கேட்டபடி, அந்த இளைஞரை அனைவர் முன்னிலையிலும் இறுக்கக் கட்டியணைத்துக் கொண்டார். இதைப் பார்த்த மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இந்நிலையில் மணப்பெண் "நான் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இவரைத்தான் காதலிக்கிறேன், இவருடன் மட்டுமே என் வாழ்நாள் முழுவதும் வாழ விரும்புகிறேன்" என்று மண்டபத்தில் உரக்க ஆவேசமாக சொன்னார்.
இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை பிடித்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இளைஞரை மீட்டனர். இதையடுத்து, அந்தத் திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.