கொழும்பில் பேருந்து ஓட்டுநர்களுக்கான கடும் சோதனை ; பயணிகள் பாதுகாப்புக்கு புதிய முயற்சி
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை காவல்துறை இணைந்து கொழும்பு கோட்டை பகுதியில் இன்று பேருந்து சாரதிகளுக்கான அவசர போதைப்பொருள் மற்றும் மதுபானப் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக இது முன்னெடுக்கப்பட்டது.
நடமாடும் மருத்துவ ஆய்வுகூட வசதிகளைக் கொண்ட பேருந்து ஒன்றின் உதவியுடன் சாரதிகளின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

மதுபானம் மற்றும் நான்கு வகையான ஏனைய போதைப்பொருள் பயன்பாடுகள் குறித்து இதன்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் குறித்த சாரதிகளுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
முன்னதாக மதுபோதையில் இருந்த சாரதிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் அனுமதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின் கீழ், ஏனைய போதைப்பொருள் பயன்பாட்டாளர்களுக்கும் எதிராக இந்த நடவடிக்கை விரிவாக்கப்படவுள்ளது.
வீதிப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதையுமே இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.