இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தே, எச்சரிக்கையை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ளன.

மின்சார சபையை முற்றாக நீக்குவதற்கான வர்த்தமானி
பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளின் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், அலுவலக சேவை சங்கம், கூட்டு மின்சார சங்கம், அழைப்பு மைய இயக்குநர்கள் சங்கம் மற்றும் பாதுகாப்பு வலுவூட்டல் மன்றம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
அதேவேளை இலங்கை மின்சார சபையை முற்றாக நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடுவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சாரசபை சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை ஒத்திவைக்குமாறு வலுசக்தி அமைச்சரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துவதாகவும் மின்சாரசபை சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.